விண்டோஸ் 8ன் முந்தைய பதிப்பு வெளியீடு

இயங்குதளம், புதிய உலாவியின் பதிப்பு மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகையில், சோதனைப் பதிப்பு முதலில் வெளியிடப்படும்.
பின்னர் வெளியீட்டுக்கு முந்தையதாகப் பல பதிப்புகள் வெளியாகும். இவற்றிற்கான பின்னூட்டத் தகவல்களைப் பெற்று, ஒரு முழுமையான பிரச்னையற்ற வெளியீட்டினை மேற்கொள்ளவே இந்த வெளியீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வகையில் விண்டோஸ் 8 இயங்குதளம் முதலில், இதன் அடிப்படையில் புரோகிராம் தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. பின் நுகர்வோருக்கான பதிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஜூன் மாதம், வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முழுமையான வெளியீட்டிற்கு முன், வேறு சில பதிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த தகவலை விண்டோஸ் பிரிவின் தலைவர் ஸ்டீபன் ஸினோப்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முழுமையான வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு, ஏறத்தாழ இறுதிப் பதிப்பு போலவே இருக்கும். எனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் கூறும் நிறை குறைகள் கணக்கில் கொள்ளப்பட்டு, இயங்குதளம் சரி செய்யப்படும்.
இந்த பதிப்பு, நுகர்வோர் கருத்துக்களைப் பெறவே வெளியிடப்படும். விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இன்டர்பேஸ் இடை முகத்திற்கு இரு வகைகளில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இதனை வரவேற்பவர்கள் ஒரு புறம் இருக்க, பெரும்பாலானவர்கள், கீ போர்டு மவுஸ் கொண்டு இயக்கப்படும் பழைய வகை ஸ்டார்ட் மெனு அடங்கிய திரைக் காட்சியையே விரும்புகின்றனர்.
புதிய இடைமுகம் டேப்ளட் பிசியில் உள்ளது போலவே இருக்கிறது. டெஸ்க்டாப் பெர்சனல் கணணி போல இல்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பிற்கு, மக்கள் அளிக்க இருக்கும் பின்னூட்டுகள் மிகக் கவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது எல்லாம் சரியாக மைக்ரோசாப் எதிர் பார்ப்பது போலச் சென்றால், வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகலாம்.